பெரம்பலூர்: காரை அருகே மலையப்ப நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். இவர்களின் குழந்தை கல்வி கற்கும் பொருட்டு இதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. பள்ளியில் 39 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 19 மாணவிகளும், 20 மாணவர்களும் உள்ள நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றிவந்த சின்னதுரை என்று ஆசிரியர் பொறுப்புத் தலைமை ஆசிரியராக இந்தப் பள்ளிக்கு வந்துள்ளார்.
மேலும், இதே பள்ளியில் அகிலா என்ற ஆசிரியையும் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் இன்று ஆசிரியை அகிலா தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில் பள்ளிக்கு வந்த சின்னதுரை மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காலையில் சீருடையில் வந்த மாணவிகளை மதிய உணவிற்குப் பிறகு கலர் உடையில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
உங்களுக்கு நடனப் பயிற்சி கொடுக்கப் போகிறேன் என்று கூறி அவர்களை நடனமாட வைத்ததாகவும் சில மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது மட்டுமின்றி மதுபோதையில் வாந்தி எடுத்து அதனை பள்ளி மாணவிகளைச் சுத்தம் செய்யுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கல்வித் துறை அலுவலர்கள், காவல் துறையினர் விரைந்துசென்று ஆசிரியர் சின்னத்துரை, பெற்றோர், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஆசிரியர் துறையை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது