பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெரம்பலூர் நோக்கி வந்த கார், காவல் துறையினரை கண்டவுடன் நிற்காமல் சென்றது.
இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் துரத்திச் சென்று எசனை என்ற இடத்தில் காரை மடக்கி பிடித்தனர். அப்போது, காரில் வந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் சவாய் சிங் என்பவர் தெரியவந்தது.
அவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபாண்டி நகரில் வசித்துவருவதாகவும் பெரம்பலூரை சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை 19 மூட்டைகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.
தொடர்ந்து ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.