கடந்தாண்டு நவம்பர் மாதம் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டது. டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடிச் சென்றது கஜா புயல். புயலின் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும், மக்களின் மனதில் இன்னும் ஆறாத ரணமாகவே இருக்கிறது. ஆம் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக பல ஆண்டுகளாக தங்களது பிள்ளைகளை போல வளர்த்து வந்த தென்னைகளை வேரோடு சாய்த்தது இந்த கஜா புயல்.
வாழ்வாதாரத்தை எதிர்நோக்கி காத்திருந்த மக்களுக்கு, அரசு சார்பிலும் தனியார் அமைப்பு சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனிடைய பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில், தென்னங்கன்றுகள் வளர்த்து அதை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் 30,000 தென்னங்கன்றுகள் வளர்க்கப்பட்டு, சமீபத்தில் 15,000 தென்னங்கன்றுகள் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 15,000 தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு கொடுப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து துணைத் தோட்டக்கலை துறை அலுவலர் வரதராஜன், “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலினால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்னங்கன்றுகளை வளர்த்து இலவசமாக வழங்க முடிவெடுத்தோம். இந்த தென்னங்கன்றுகள் ஐந்து அல்லது ஆறு வருட காலத்தில் நல்ல மகசூலை தரும். மேலும் இந்தாண்டு தென்னங்கன்றுகள் வளர்க்கப்பட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அனுப்பப்படும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எங்களின் முயற்சி நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்புகிறோம்”என்றார்.
கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளின் துயர் துடைக்கும் இந்த முயற்சி மென்மேலும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் பொதுமக்கள் அவதி...