பெரம்பலூர்: பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பிரபலமான (ஆசிஃப்) என்ற பிரியாணி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சிலநாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்ட அரசு கால்நடை மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த ஹோட்டலில் பழைய பிரியாணியை சூடு செய்து விற்பனை செய்வதாக தகவல் அறிந்த மருத்துவர் இது குறித்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அவரிடம் ஹோட்டல் ஊழியர்கள் தகராறு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் உணவு பாதுகாப்புத் துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை செய்து உணவு மாதிரிகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். செய்தி எடுத்துக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு கேமராவை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கால்நடை மருத்துவர் கூறியது உண்மை எனவும், இதனிடையே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காகவும், சமைக்கப்பட்ட உணவை குளிர்பதன சாதனத்தில் வைத்திருந்ததாகவும் கூறி கடைஉரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்திடம் தரமான உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயார் செய்யப்படும் சமையல் அறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு சேகரித்த உணவு மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Yamuna river: அபாய கட்டத்தை தாண்டி பாயும் யமுனை!