பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர் அன்னமங்கலம், சித்தளி, முருகன்குடி, கீழக்கணவாய், வெண்பாவூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்நிலையில் வேப்பந்தட்டை வட்டம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் தான் வளர்த்து வந்த நாயுடன் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனிடையே தான் அழைத்து வந்த நாய் வனப்பகுதிக்குள் சென்றவுடன் அங்கு இருந்த மான் குட்டியை துரத்தி கடித்து கொன்றுள்ளது.
இதனிடையே அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனசரகர் மாதேஸ்வரன் மற்றும் வன காவலர்கள் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் உத்தரவின்பேரில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்குட்டி இறப்பதற்கு காரணமாக இருந்த இளைஞருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.