பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டு மக்காச்சோள பயிர்கள் அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறைதீர்க்கும் நாளான இன்று ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள், அமெரிக்க படைபுழுவால் பாதிக்கப்பட்டுள்ளன, அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, திருவோடு ஏந்தும் நிலை விவசாயிகளுக்கு வந்துவிட்டது. தமிழ்நாடு அரசு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு நிவாரண நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் வீடு முன்பு தமிழ்நாடு ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார்.