பெரம்பலூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி. திருமணமான இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்த இவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த, மர வேலை செய்து வரும் மகேந்திர குமார் என்பவர் பூங்கொடி பணிபுரிந்து வந்த உணவகத்திற்கு அடிக்கடி சாப்பிடச் சென்றுள்ளார். இதில் பூங்கொடிக்கும் மகேந்திர குமாருக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் திருமணத்தை மீறிய தொடர்பாக மாறியது.
பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த பூங்கொடி, கடந்த, 17ஆம் தேதி பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், மகேந்திர குமாருடன் அறை எடுத்து தங்கி திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (ஜன.20) காலையில் பூங்கொடி தங்கியிருந்த அறை வெகு நேரம் திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தனர்.
அப்போது, இருவரும் மயங்கிய நிலையில் கிடந்த உள்ளனர். இதுகுறித்து, விடுதி ஊழியர்கள் பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பூங்கொடி மகேந்திர குமார் இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் பெண் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. உயிருக்கு போராடிய மகேந்திர குமாரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் கற்பமான சிறுமி: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!