பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டடத்தை அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று பார்வையிட்டார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதிகளில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைவீதி பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்றார்.
தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தை ஆய்வுசெய்த அவர் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!