பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திருமாந்துறை பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைவதற்காக 2007ஆம் ஆண்டு திருமாந்துறை, பெண்ணக்கோணம், லப்பைகுடிகாடு உள்ளிட்ட பத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களிடமிருந்து சுமார் மூன்றாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதன்படி, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் ஜி.வி.கே. என்ற நிறுவனம் நிலம் கொடுத்த விவசாயிகள், பொதுமக்களுக்கு வீட்டில் ஒருவருக்கு வேலை, வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக அனைவரும் நிலம் கொடுத்தனர்.
இந்நிலையில் 12 ஆண்டுகளாகியும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவும் இல்லை, ஜி.வி.கே. நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் இல்லை. ஆகையால் திருமாந்துறை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளனர்.
மேலும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர். இதனிடையே வரும் 30ஆம் தேதி நிலம் கொடுத்த விவசாயிகள், பொதுமக்கள் நிலத்தை கைப்பற்றும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்