பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பளையம் கிராமத்தில் நரிக்கரடு என்ற பகுதியில் மழை நீர் செல்லும் ஒரு வாய்க்காலில், மஞ்சுளா என்ற பெண் நேற்று (நவ.29) மாடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ உரசி உள்ளது.
அதனை அருகே சென்று மேலோட்டமாக தோண்டி பார்த்தபோது, ஏதோ ஒரு சிலை போன்று தென்பட்டுள்ளது. உடனே இது குறித்து அப்பகுதியின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேல் அதை வெளியே தோண்டி பார்த்தபோது, ஒரு அடி உயரமும், சுமார் 7 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை என்பது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, அவர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சிலையை சுத்தம் செய்து பார்த்தபோது, அது வெண்கல சிலை என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த சிலைக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி அம்மன் சிலையை பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலர் அகிலனிடம் அந்த சிலையை ஒப்படைத்தனர்.
அப்பகுதியில் மழைநீர் வடிவதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வாரி அமைத்துள்ளனர். அப்போது மண்ணில் புதைந்திருந்த சிலை வெளியே தெரிந்துள்ளது. இந்த சிலை எந்த கோயிலுக்குச் சொந்தமானது, இந்த இடத்திற்கு அந்த சிலை எப்படி வந்தது என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது - மும்முனைப் போட்டியில் முந்தப்போவது யார்?