பெரம்பலூர் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளம், ஆலத்தூர் பாடாலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, புதூர், எசனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் பதுக்கி இருப்பதாக வேளாண் அலுவலர்களுக்கு புகார் வந்தது.
இதனிடையே ஆலத்தூர், சத்திரமனை, செட்டிகுளம், உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய வெங்காய வியாபாரிகள், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள பல சின்ன வெங்காயம் குடோன்களை வாடகைக்கு எடுத்து, அதில் பெரிய வெங்காயத்தை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ஆய்வு மேற்கொண்ட வேளாண் அலுவலர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயத்தை உடனடியாக சந்தைக்கு எடுத்துச் செல்ல எச்சரித்தனர். மேலும், வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு இது போல குடோன்களை வாடகைக்கு கொடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் வசதி