தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னச்செரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை மாலை ஆறு மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு இன்று இயல்பு நிலை திரும்பியது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் கடைவீதி பகுதி, காமராஜர் வளைவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் புதிய பேருந்து நிலையத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெரம்பலூர் ஆட்சியரின் அறுவுறுத்தலின் பேரில் போக்குவரத்துத் துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார் கரோனா வைரஸ் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் எடுத்துரைத்தார்.
அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் ஓடும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்