தமிழ்நாட்டில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகரன் சேந்தமங்கலம் (எஸ்.டி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சந்திரன் எனபவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரன் 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2001 முதல் 2016ஆம் ஆண்டு வரை கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும் பதவி வகித்தார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினரானார்.
இதையடுத்து, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று தனக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (மார்ச்.21) சேந்தமங்கலம் அடுத்த உத்திரகிடி காவல் ஊராட்சிக்கு உள்பட்ட மலைவேப்பன் குட்டை, புதுத்தெரு பகுதியில் தனக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர் ”அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லாத நீங்கள் அதிமுக கரை வேட்டியையும் அக்கட்சியின் பெயரையும் பயன்படுத்தி ஓட்டு கேட்கிறீர்கள்.
கடந்த தேர்தலின் போது தண்ணீர் பிரச்சனைக்கு மோட்டார் வைத்து தருகிறேன், கோயில் கட்டித் தருகிறேன் என வாக்குறுதிகள் அளித்தீர்கள் ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை” என எம்.எல்.ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், ”விருப்பம் இருந்தால் எனக்கு ஆதரவு தாருங்கள் இல்லையெனில் அமைதியாக சென்று விடுங்கள்” எனக் கூற, அங்கிருந்த பெண் ஆவேசமடைந்து ”அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை மக்களை முட்டாளாக்க வேண்டாம்” என எதிர் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த சந்திரசேகரனின் ஆதரவாளர் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாகக்கூற, அதற்கு நாங்கள் பணத்துக்காக அடிமையாக மாட்டோம் என அப்பெண் எதிர்வினையாற்ற, நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த சந்திரசேகரன் விரக்தி அடைந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்!