நாமக்கல் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம்புதூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள்
வசித்து வருகின்றனர். 944இல் அரசு இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீருக்காக கிணறு ஒன்றை அமைத்துக்கொடுத்தது.
இங்குள்ள மக்கள் தலைமுறை தலைமுறையாக இக்கிணற்று தண்ணீரை உபயோகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிணற்றின் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தினை கொண்ட முத்துலட்சுமி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கிணற்றினை சுற்றி கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.
கோடைகாலம் என்பதால் பட்டியலிர் தெரு மக்கள் பொதுகிணற்றில் இருந்து நீர் எடுக்கமுடியாமல் தவித்துவந்தனர். இதையடுத்து இன்று காலை பட்டியலின பொதுமக்கள் குடிநீருக்காக பொதுகிணற்றில் நீர் எடுக்க முயன்றபோது முத்துலட்சுமி கிராம மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, கிராமமக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், கிராம உதவியாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தனர். இதன் காரணமாக பொட்டணம் புதூர் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.