உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று இந்திய மக்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது. வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் விதமாக, ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்திற்குப் படிக்கச் சென்ற மாணவ, மாணவிகள், பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால், வேலை, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, ஒரு சிலர் தன்னம்பிக்கையுடன் தங்கள் சொந்த ஊருக்கு எப்படியும் சென்று விடுவோம் என முயற்சி செய்துவருகின்றனர். இதேபோன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு பணிக்குச் சென்ற டிப்ளமோ பட்டதாரி லோகேஷ் (23).
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலசுப்பிரமணியம் என்பவரின் மகனான இவர், தன்னுடன் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 இளைஞர்களுடன் வாகனங்கள் ஏதும் இல்லாததால் 100 கிலோ மீட்டருக்கு மேல் நாக்பூரில் இருந்து நடந்தே வந்துள்ளனர்.
மூன்று நாட்கள் கடுமையான வெயிலில் நடைபயணம் மேற்கொண்ட லோகேஷ், வழிப்போக்கில் கிடைத்த லாரி ஓட்டுநர் உதவியுடன், அதே லாரி மூலம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்துள்ள மாதர்பள்ளி காவல்நிலைய எல்லைக்குள் நுழைந்துள்ளார். அங்கு காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் சிக்கிய இவர்கள் விசாரணைக்குப் பின்னர், உடனடியாக ஹைதராபாத் பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
![இளைஞர் லோகேஷ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-pallipalayam-walking-worker-death-script-vis-7205944_03042020083213_0304f_1585882933_46.jpg)
நேற்று முன்தினம் (ஏப்ரல்-1)இரவு முகாமில் இருந்தவர்களுடன் குளித்துவிட்டு, இரவு உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென மயங்கிவிழுந்த இளைஞர் லோகேசை, உடனே ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
பரிசோதனையில், இளைஞர் லோகேஷ்க்கு உடலில் அதிகப்படியான நீர் வெளியேறியதன் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்த லோகேஷின் உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மகராஷ்டிராவில் இருந்து நடந்தே சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்த இளைஞர் லோகேஷ், தெலங்கானாவில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஏப்ரல் 5 இல் 9 நிமிடங்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி வேண்டுகோள்