நாமக்கல்: அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், 2011 - 15, 2016 - 2021 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், பாஸ்கர், அவரது மனைவி உமா ஆகியோர் தனது வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து இன்று (ஆக. 12) காலை 6.30 மணி முதலே பாஸ்கருக்குச் சொந்தமான 28 இடங்களிலும் மதுரை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு இடத்தில் என மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் எட்டு குழுக்களாகப்பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பாஸ்கருக்கு ஆதரவாக அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொன் சரஸ்வதி, பரமத்திவேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஸ்கரின் ஆதரவாளர்கள் ஆகியோர் முகாமிட்டிருந்தனர்.
இந்த சூழலில் 12 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலை 6.30 மணியளவில் முடிவடைந்தது. இந்த சோதனையில் ரொக்கப்பணம் ரூ.26,52,660/-, ரூ.1,20,000/ மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
![லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-04-vigilance-raid-complete-script-vis-tn10043_12082022202004_1208f_1660315804_240.jpg)
மேலும், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருள்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.14,96,900/- மற்றும் வழக்குத்தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிர்வாகம் மீது நடவடிக்கை