நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து நடிகர் வாசு விக்ரம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் சென்ற ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர் தற்போது தேர்தல் நடைபெறவுள்ளதால் மாதத்திற்கு நான்கு முறை வந்துசெல்கிறார். அதன் உள்நோக்கத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர்கள் பலரும் தகுதியற்றவர்களாக இருப்பதால்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை பேசவிடவில்லை. பிரதமர் மோடி கருப்புப் பணத்தை மீட்டு இந்திய மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். தற்போதுவரை வங்கிக் கணக்கில் அந்த பணம் செலுத்தப்படவில்லை.
வறட்சி காரணமாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடி, அவர்களை நேரில்கூட சந்திக்கவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கி வரும் காலத்தினை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை என அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்படும், ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும்” என்றார்.