நாமக்கல் அடுத்துள்ள செம்பாறைபுதூர் பகுதி, ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை உடல் சிதறிய நிலையில், ஆணின் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர், 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆணின் உடலைக் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசி சென்றனரா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த நபரை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.