நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு வணிகர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, "கோயம்பேடு பழ மற்றும் காய்கறி சந்தைகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல் பூ மார்க்கெட்டையும் திறக்க விரைவில் அனுமதியளிக்க வேண்டும்.
கரோனா காலத்தில் முறையான காரணமின்றி கடைகளுக்கு சீல் வைப்பதை மாநகராட்சி ஊழியர்கள் நிறுத்த வேண்டும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளிக் கடைகளை இரவு 12 மணி வரை திறக்க மாநில அரசு அனுமதியளிக்க வேண்டும்.
குற்றால அருவியை திறந்தால் மட்டுமே ஆயிரக்கணக்கான வணிகர்களின் வாழ்வை மேம்படுத்த முடியும். எனவே குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய அவர், "வரும் காலங்களில் அத்தியாவசிய பொருள்களான உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, அவற்றையும் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும். வெங்காயத்தின் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கே காரணம். வெங்காயத்தின் இருப்பை தொடர்ந்து கவனித்து வந்திருந்தால் விலை உயர்ந்திருக்காது" என்றார்.
இதையும் படிங்க: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்மைத் துறை ஒதுக்கீடு