நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த பாச்சல் அருகேயுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 5ஆம் தேதி அதிகாலை திடீரென தீ பற்றியதில், அதிலிருந்த 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது.
இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். கல்லூரி வளாகத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த அவர்கள், மூன்று பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் மையத்திற்குள் வெல்டிங் இயந்திரத்துடன் சென்றதையும், அவர்கள் வெளியே வரும்போது ஏடிஎம் இயந்திரம் தீ பற்றி எரிந்ததையும் கண்டனர்.
இதையடுத்து புதுச்சத்திரம் காவலர்கள் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்குவந்த டாரஸ் லாரியில் இருந்து மூன்று பேர் இறங்கி தப்பியோடியுள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் 3 பேரும் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த சைகுல், முகமது சராபத், முகமது ஜீனித் என்பது தெரியவந்தது.
இவர்கள் மூவரும் கடந்த 5ஆம் தேதி ஹரியானாவில் இருந்து மதுரைக்கு சரக்குகளை ஏற்றி வந்ததும், லோடு இல்லாமல் ஆந்திராவுக்கு செல்ல முயன்றபோது, ஆள்நடமாட்டம் இல்லாத ஏடிஎம் மையத்தில் வெல்டிங்க் இயந்திரத்தின் உதவியுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அம்மூவரையும் கைது செய்த புதுசத்திரம் காவலர்கள் கொள்ளைக்குப் பயன்படுத்திய லாரி, வெல்டிங் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். தீரன் படத்தில் வருவது போல் பகலில் லாரி ஓட்டுநர்களாக செயல்பட்டு ஆள் நடமாட்டம், காவலர் இல்லாத ஏ.டி.எம் மையங்களை கண்டறிந்து இரவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் நாமக்கல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை!