நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேவுள்ள இடையன் பரப்பை பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர், இன்று (செப்.13) நடைபெறும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, நேற்று (செப்.12) இரவு 9:30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் நீட் அச்சம் காரணமாக நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும்.
இந்நிலையில் திருச்செங்கோடு காவல் துறையினர், உயிரிழந்த மாணவர் மோதிலால் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மாணவர் மோதிலால் மூன்றாம் முறையாக நீட் தேர்வு எழுதவிருந்ததும், தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர் மோதிலாலின் உடல், உடற்கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாணவரின் வீட்டில் உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவர் மோதிலாலின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செங்கோடன்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:கனவுகளுடன் சிறகடித்த மாணவச் செல்வங்களை கொன்று புதைக்கும் நீட் தேர்வு... மனம் இறங்குமா மத்திய, மாநில அரசுகள்?