நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு நல்லிபாளையம் பகுதியில் உள்ள குட்டையானது நேற்று (செப்.09) இரவு பெய்த கனமழையால் நிரம்பியது.
இதனால் சின்ன அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனிக்குள் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீரானது புகுந்தது.
மேலும் அங்கு வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செல்லும் சாலையும் மழை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, மழை நீரானது குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் தேள், பாம்பு, பூச்சிகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வீடுகளுக்குள் வந்ததால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அச்சத்துடனே இரவை கழித்ததாக வேதனையாகத் தெரிவித்தனர்.
புறவழிச்சாலை அமைக்கும் போது நீர் வழிப்பாதை அடைக்கப்பட்டதால் மழை நீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லாததால், சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுவதால் பெரும் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சுமத்தினர்.
இதையும் படிங்க: பேக்கிரியில் கேக் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!