நாமக்கல் அருகே மோகனூரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரியில் இன்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்தனர். மஹாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் நாட்டிலுள்ள புண்ணிய ஸ்தலங்களில் நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுவதை இந்துக்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தை அமாவாசை தினம் என்பதால் நாமக்கல், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவிரிக் கரையில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். அவர்கள் காவிரிக் கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்தனர். இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வருகை தந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
இதையும் படிங்க: வீடு வீடாகச் சென்று 'இருளர்' சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்!