நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய, நடுத்தர ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதி கோரி வணிகர் சங்கத்தினரும், ஜவுளிக்கடை உரிமையாளர்களும் முன்னதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில், நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், ஜவுளிக்கடை உரிமையாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இன்று (21/05/2020) முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளையும், குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு இயக்கவும், தரைத்தளம், முதல் தளம் ஆகியவற்றை மட்டும் திறந்து, காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், இந்த அறிவிப்பின்படி திறக்கப்படும் அனைத்து ஜவுளிக்கடைகளும் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கடையில் உள்ளவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இவற்றைப் பின்பற்றுவதில் விதிமீறல்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட கரோனா நோயாளிகள்; சேலத்தில் அடாவடி!