நாமக்கல்: டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன.
இந்த 3 ஊர்திகளும் தமிழ்நாடு முழுவதும் வலம் வரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு அரசின் 2 அலங்கார ஊர்தி இன்று நாமக்கல் வந்தடைந்தது. நாமக்கல் பூங்கா சாலையில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்ட அலங்கார ஊர்திகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மலர் தூவி வரவேற்றார்.
இந்த ஊர்திகளில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, உள்பட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவச்சிலை மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார் பெருமை சேர்க்கும் வகையில் அவர் இயக்கிய கப்பல் மற்றும் அவர் கோவை மத்திய சிறையில் இழுத்த செக்கு போன்றவை இடம் பெற்றிருந்தன.
பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அலங்கார ஊர்தியை பார்வையிட்டு ரசித்தனர். பலர் ஆர்வ மிகுதியில் ஊர்தி முன்பு நின்று செல்பியும் எடுத்துக் கொண்டனர். அலங்கார ஊர்தி வருகையை முன்னிட்டு பரதநாட்டியம், பறை இசைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க:'ஆளுநர்கள் ஒற்றர்களாக செயல்படுகிறார்கள்'- நாராயண சாமி குற்றச்சாட்டு!