நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு வணிகர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரம்ராஜா, "வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகளை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து அரசு நீக்கியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. நீக்கப்பட்ட பொருட்களை மீண்டும் அத்தியாவசியப் பொருட்களில் சேர்க்க வேண்டும்.
நாடு முழுவதும் நாளை (டிச.8) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு வணிகர் சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு அளிக்கும். கடைகள் அடைப்பது குறித்து இன்று (டிச.7) மாலைக்குள் முடிவெடுக்கப்படும். கரோனா காலத்தின்போது முகக்கவசம் அணியவில்லை, தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என அரசு, வணிகர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ளது.
இத்தொகையை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அரசு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கடைகளை இடிக்கும் முடிவுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு!