நாமக்கல்: திருச்சி சாலையில் கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமாக கிரீன்ஸ் என்ற பெயரிலான தனியார் பல்பொருள் அங்காடியும், குழந்தைகளுக்கான விளையாட்டு மையமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடை ஊழியர்கள் நேற்று (மார்ச்.14) இரவு 9 மணிக்கு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு பல்பொருள் அங்காடியை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இரவு 11 மணிக்கு மேல் கடையின் பின்புறம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவெனப் பரவி, பல் பொருள் அங்காடியின் அனைத்து பகுதிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது.
இதில் அங்கிருந்த அனைத்து வகையான பொருள்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. தீ வேகமாக பரவியதையடுத்து ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் நான்கு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்தில் கடையில் இருந்த மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
இதையும் படிங்க: 2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி