நாமக்கல்: மாணவர்களை கரோனா தொற்றிலிருந்து காக்கும் வண்ணம், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வாயிலாக அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி கல்வியைப் போல, ஆன்லைன் கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை.
செல்போன்கள் இல்லாமல் பல மாணவர்கள் கல்வியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும், பழங்குடிகள் வசிக்கும் மலை கிராமங்களிலும் சரியாக நெட்வொர்க் இல்லாததால், மாணவர்கள் கல்விக்காக பல சாகசங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. அண்மையில் சேர்வலாறு கானி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், செல்ஃபோன் நெட்வொர்க் இல்லாததால், 16 கி.மீ நடந்தே சென்று ஆன்லைன் தேர்வு எழுதிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆலமர உச்சியில் வகுப்பு
அந்த வரிசையில் இணைந்துள்ளன பெரபஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை ஆகிய கிராமங்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரு கிராமங்களிலும், செல்போன் டவர் அமைக்கப்படாததால் மாணவர்கள், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க, உயிரை பணயம் வைத்து பல காரியங்களை செய்ய வேண்டியிருக்கிறது.
அங்குள்ள உயரமான ஆலமரத்தில் ஏறி, கிளைகளின் மீது சமர்த்தாக அமர்ந்து ஆன்லைன் வகுப்பை தொடர்ந்து வருகின்றனர். இவர்களின் கல்வி தாகம் காண்போரை வியப்பில் ஆழ்த்தினாலும், உயிரை பணயம் வைத்து மரங்களில் ஏறுவது நெஞ்சை பதைபதைக்கவைக்கிறது.
உரிய நடவடிக்கை
இந்த அவலம் இனியும் தொடராமல் இருக்க அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், விரைவில் அப்பகுதியில் செல்ஃபோன் டவர் அமைக்கப்படும் என்றும், அப்படியில்லாதபட்சத்தில் அருகாமையில் உள்ள செல்ஃபோன் டவரில் இருந்து சிக்னல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மொபைல் நெட்வொர்க் கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் அவதி!