தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்தான். இந்த ஆஞ்சநேயர் சாமியின் சிலை 18 அடி உயரம் கொண்டதாகும். 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயில் நாமக்கல் மலைக்கோட்டையின் கீழே அமைந்துள்ளது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட மிக பிரமாண்டமான இந்த ஆஞ்சநேயர் சிலையை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் முதலாவதாக வரும் மூலம் நட்சத்திரம் அன்று அனுமன் ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் டிசம்பர் 25ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாளையொட்டி நாமக்கல்லிலுள்ள ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் நடைபெறவுள்ளன.
இதற்காக ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு, ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடைபெற இருப்பதாக கோயில் பட்டாச்சாரியார்கள் தெரிவிக்கின்றனர். இதனையொட்டி ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை தயாரிக்கும் வடமாலை தயாரிக்கும் பணி இன்று தொடங்கியது.
இந்தப் பணியில் திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். இது குறித்து பட்டாச்சாரியார் ரமேஷ் கூறுகையில், "நான்கு நாள்களுக்கு நடைபெறும் இப்பணி இரவு பகலாக நடைபெற்று 25ஆம் தேதி அதிகாலை ஆஞ்சநேயருக்கு வடமாலை அலங்காரம் செய்யப்படும்.
ஆஞ்சநேயருக்கு உளுந்த வடை மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று. அதனை ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்து பூஜை செய்யும்போது பூமி குளிர்ச்சியடையும் என்பது நம்பிக்கை" என்றார்.
இதையும் படிங்க: மாநில அரசின் கொள்கைகளை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரிமில்லை: நாராயணசாமி!