நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டி அரசுத் தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த சிறுமி காயத்ரி, கடந்த ஜூலை நான்காம் தேதி பள்ளியில் கழிப்பறைக்குச் சென்றபோது, சுவர் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றும் சிறுமி முழுமையாக குணமடையவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற அதிக செலவு ஏற்படும் என்பதால், தன் மகளுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, சிறுமியின் தந்தை செல்வவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும், அரசின் அக்கறையின்மை, கவனக்குறைவு காரணமாகவே தன் மகளுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தன் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை செயலர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதிக்குள் மனுவிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.