தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாடு கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. அதேபோல், இந்தாண்டும் நான்காவது முறையாக முதலிடம் பெறும் என்றார்.
தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதே அதற்கு முக்கிய காரணம் என தெரிவித்த அமைச்சர், இதனால் வருவாயும் அதிகரித்துள்ளது. மேலும் கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படுமா என செய்தியாளர்கள் கேட்ட போது இது குறித்து வனத்துறை மற்றும் மத்திய அரசுடன் ஆலோசித்து இத்திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வாக்காளர்கள் தற்போது விழிப்படைந்துள்ளதால் அவர்களை இம்முறையும் திமுகவால் ஏமாற்ற முடியாது. திமுகவின் எண்ணமும் பலிக்காது என்று தெரிவித்தார்.