நாமக்கல்:பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ் (38). இவர் தனது லாரியில் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.
வழக்கம் போல, லாரியில் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன், சேலம் சாலையில் சென்றுள்ளார். அப்போது, பொம்மைகுட்டைமேடு என்னும் இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு உணவு உட்கொண்டிருந்தார்.
கத்தியைக் காட்டி லாரி கடத்தல்
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் லாரிக்குள் ஏறி ஓட்டுநர் பிரகாஷிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 30 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.
பொதுமக்களிடம் தர்ம அடி
மேலும், லாரியைக் கடத்த முயன்ற அந்த நபர்கள், லாரியை ஓட்டிச் சென்ற போது முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதைக் கண்ட மக்கள் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், இருவர் மட்டும் சிக்கிக்கொண்டனர். பின்னர், மதுபோதையில் இருந்த இருவரையும் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அங்கு சென்ற நல்லிபாளையம் காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், புதன்சந்தையைச் சேர்ந்த சூர்யா மற்றும் களங்காணியை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, படுகாயம் அடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்