நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஊராட்சிக்குள்பட்டது போதைமலை மலைக் கிராமம். இங்கு மேலூர், கீழூர், கெடமலை என மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் கரடுமுரடான பாதையில்தான் கீழே வர வேண்டும். பலஆண்டுகளாக சாலைவசதி கேட்டும் அரசுத் தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நல்ல முறையில் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்நிலையில் தற்போது ஊரக ஊராட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பெட்டிகளை அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதன் ஒருபகுதியாக ராசிபுரம் வெண்ணந்தூர் ஊராட்சிக்குள்பட்ட போதைமலை பகுதியிலுள்ள கீழூர், கெடமலையிலுள்ள ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
எனவே இந்த இரண்டு வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் இந்த கரடுமுரடான பாதையில் வாக்குப்பதிவு பெட்டியை எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல; கடந்த 50 ஆண்டுக்கும் மேலாகவே இந்த நிலை தொடர்ந்து வருவதுதான் வேதனையளிக்கிறது. அரசு அலுவலர்களின் ஒருநாள் சுமை மாலையில் மறைந்துவிடும்.
ஆனால், தினந்தோறும் இங்குள்ள மலைவாழ் மக்கள் சுமந்துவரும் அவலநிலையை அரசு கண்டுகொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதையும் படிங்க: பொதுவுடைமை தத்துவத்தை நல்லகண்ணுவுடன் ஒப்பிட்ட ஸ்டாலின்!