நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா கடந்த 30 வருடங்களாக குழந்தைகளை விற்பனை செய்துவந்த சம்பவம் சில நாட்களுக்கு முன் அம்பலமானது. மேலும், ஆண் குழந்தை வெள்ளையாக 3 கிலோ எடையுடன் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரையும் விற்பனை செய்துவந்த அவரது செயல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து, அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ராசிபுரம் தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, நாமக்கல்-ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், கொல்லிமலை பகுதியில் பத்து குழந்தைகளை வாங்கி செவிலியர் அமுதாவிடம் விற்றதாக முருகேசன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பெண்களை பிடித்தும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.