நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கட்சியின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, “முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை செய்வதற்காக சிபிஐ கைது செய்து எட்டு நாட்களான நிலையில், அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நாடாளுமன்ற நிகழ்வுகளை எப்படி நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்களோ, அதுபோல் சிதம்பரத்திடம் நடத்தும் விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.
அப்போதுதான் அவர் குற்றம் செய்தவரா? குற்றமற்றவரா? என்பது தெரியவரும். குற்றம் இல்லாத ஒருவரைக் கைது செய்து விசாரணை செய்வது என்பது அவரை அவமதிப்பதாகும். அவர் மீதான குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனில், அவருடைய அரசியல் வாழ்வைப் பழுது படுத்துவதற்கான மத்திய அரசின் நோக்கம் தான் இது என்பது உறுதியாகிவிடும்” என்று கூறினார்.
மேலும், முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்துக் கேட்டபோது, முதலமைச்சர் வெளிநாடு செல்வதை வரவேற்பதாகவும், மாநிலத்தில் அந்நிய முதலீட்டைப் பெருக்க, இங்குத் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்களைச் சந்திக்கச் செல்வதாகக் கூறியுள்ளார். அப்படியென்றால் ஏன் மாநிலத்தில் உள்ள வாகனம், பேருந்து உள்ளிட்ட இதர தொழிற்சாலைகளின் விரிவாக்கம் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறது.
ஆகவே ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளை மீண்டும் இங்கு கொண்டு வர முடியாதவர்கள், இனிமேல் வெளிநாடுகளிலும், வேறு மாநிலங்களிலிருந்து என்ன தொழிற்சாலைகளைக் கொண்டுவரப் போகிறார்கள். கடந்த காலங்களில் செய்யப்பட்ட தொழில் முதலீடு தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதில் இதுவரை இரண்டு தொழில் முனைவோர்கள் மாநாடு நடத்தி முடித்தாகிவிட்டது.
அதில் எத்தனை தொழில் தொடங்க வந்திருக்கிறார்கள். எவ்வளவு முதலீடு நடந்திருக்கிறது. எத்தனை தொழிற்சாலைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேருக்கு அதில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது என்ற முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் சுற்றுப் பயணம் என்பது, அது பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையாக புரியாத புதிராக உள்ளதாகவும் தெரிவித்தார்.