பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காவல் துறையின் குழந்தைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுத் தொகையை வழங்கினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த சந்தோஷ்குமார் என்பவருக்கு ரூ.7500, இரண்டாம் இடம் பிடித்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.5500, மூன்றாம் இடம் பெற்ற நித்தீஷ்குமார் என்பவருக்கு ரூ.3500 பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு வழங்கினார்.
அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த சந்தீப் என்பவருக்கு ரூ.6500, இரண்டாம் இடம் பெற்ற தேவமுகி என்பவருக்கு ரூ.6500, மூன்றாம் இடம் பெற்ற தர்ஷினி என்பவருக்கு ரூ 4500 பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வழங்கினார்.
இந்த பரிசுத்தொகையை மாணவர்களும் அவரது பெற்றோர்களான காவலர்களும் இணைந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாணவர்கள் மேலும் பல சாதனைகள் புரியவேண்டும். அதற்காக பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என அறிவுரை கூறினார்.