நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்துள்ள பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ்(24). இவர், தன் வீட்டின் வீட்டின் எதிரே இருக்கும் 10 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதனை அறிந்த தேவராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். அன்று தேர்தல் நாள் (ஏப்.6) என்பதால், காவலர்கள் யாரும் இல்லை என்று கூறி மறுநாளை வருமாறு கூறியிருக்கிறார்கள். சிறுமியின் தாயார், அடுத்த நாள்(ஏப்.7) மீண்டும் காவல் நிலையம் சென்ற போது, புகாரைப் பெற்றுக் கொண்ட காலர்கள், அதற்கான சான்று எதையும் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேவராஜின் உறவினர்கள் சிலர் காவல்துறையில் புகார் கொடுக்கக் கூடாது என தங்களை மிரட்டுவதாகவும், இரண்டு நாட்களாக மகளிர் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் காவலர்கள் தப்பியோடிய அவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்: இருவர் கைது!