நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களாக திமுகவை சேர்ந்த துரைசாமி, கவிப்பிரியா, சிவக்குமார் மற்றும் கருமணன் ஆகிய நான்கு பேரும், அதிமுக சார்பில் சண்முகம், விமலாதேவி, பூங்கொடி மற்றும் திலகவதி ஆகிய நான்கு பேர் என மொத்தம் எட்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், இன்று ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 4 திமுக உறுப்பினர்களும், 4 அதிமுக உறுப்பினர்களும் சம பலத்தில் இருப்பதால் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தேடுப்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
தெலுங்கு தேசம் லோகேஷ் வீட்டுச் சிறையில் வைப்பு!
இந்த சூழலில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இதனால், தேர்தலை நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி அறிவித்தார். மேலும், மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.