நாமக்கல்: நாமக்கல் அருகே வேட்டாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராஜமாணிக்கம் (61). இவர் உறவினர்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வருவதாகத் தெரிகிறது. இவர் தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்து உள்ளார்.
இந்த நிலையில், முதியவர் ராஜமாணிக்கம் கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி படுத்த படுக்கையாக இருந்து உள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கடந்த ஜூலை 7ஆம் தேதி வீட்டில் இருந்த ராஜமாணிக்கத்தை ஆம்புலன்ஸ் மூலமாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜமாணிக்கத்தை அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவருக்கு தக்க சிகிச்சை அளித்து வந்து உள்ளனர்.
மேலும், இவருக்கு இரு கால்களிலும் பிரச்னை இருந்திருப்பதால் அதற்கும் சிகிச்சை அளித்து உள்ளனர். இதை அடுத்து ராஜமாணிக்கத்திற்கு உதவி புரிவதற்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே கொண்டு வந்து சாலையின் ஒரமாக போட்டு விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சாலையில் கிடந்த முதியவர் ராஜமாணிக்கத்தை கவனிக்க யாரும் இல்லாததால் சுமார் 5 மணி நேரமாக அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களில் ஊழல் - மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு!
இதனையறிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை யார் மருத்துவமனைக்கு வெளியே கொண்டு சென்று விட்டார்கள் என அரசு கல்லூரி முதல்வர் தொடர் விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, இது போன்ற சம்பவம் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும், இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதியவரை மருத்துவமனைக்கு வெளியே சாலையில் விடப்பட்ட நிகழ்வு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலி போலீஸை சுற்றி வளைத்த ரியல் போலீஸ்... நாமக்கல்லில் அரங்கேறிய திருட்டுச் சம்பவம்!