நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகியப்பகுதிகளில் காவிரி ஆறு செல்கிறது. அப்பகுதிகளில் இயங்கி வரும் சில சாய ஆலைகள், தங்களது கழிவுநீரை இந்த ஆற்றில் கலந்து விடுவதாக அவ்வப்போது புகார் எழுந்தது. இதனையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அந்த சாய ஆலைகளுக்கு சீல் வைத்து அவற்றை அகற்றி வருகின்றனர்.
இப்பகுதிகளில் சாய ஆலைக் கழிவுகள் கலந்த நீர், ஓடைகளில் செல்வதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து இதுகுறித்து விசாரித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, தேசிய பசுமைத் தீர்ப்பாய குழுவினர், அலுவலர்கள் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் இதுகுறித்து நேற்று (செப்.21) நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் மெகராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், குமாரபாளையம் பகுதியில் காவிரி நகர், மணிமேகலை தெரு உள்ளிட்டப் பகுதிகளில் கால்வாயில் செல்லும் நீரைப் பார்வையிட்டு அதனை சேகரித்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை அருகே தனியார் சாய ஆலைக்கு நேரில் சென்ற இந்தக் குழுவினர், அந்த ஆலையில் சாயக்கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டதா?, கழிவு நீர் மேலாண்மை கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் கூறுகையில், 'காவிரி ஆற்றில் ஆய்வு செய்து, ஆய்வறிக்கை தாக்கல் செய்த பின்னர், சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பது குறித்து இத்தீர்ப்பாயம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்' என்று தெரிவித்தனர். இப்பகுதிகளில் இன்று (செப்.22) ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.