நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையத்தில் விஜயகுமார் என்பவர், வீட்டிற்கு அஸ்திவாரம் பறிக்கும் பணியில் இன்று காலை முதல் கட்டடத் தொழிலாளிகளான முதலைப்பட்டியைச் சேர்ந்த சின்னுசாமி மற்றும் தாதம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 10 அடி அளவில் குழி பறித்தபோது தொழிலாளிகள் சின்னுசாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மீது மண் சரிந்து குழிக்குள் புதைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் அப்பகுதியினர் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் மீட்கமுடியாததால் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுற்றியுள்ள மண்ணை அகற்றி, அவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் கடும்முயற்சியில் ஈடுபட்டு உயிருடன் பத்திரமாகமீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை