நாமக்கல்: பிறக்கும் குழந்தைகள், சில நேரங்களில் குறைபாடுடன் பிறக்கும். அக்குழந்தையை வளர்க்கும் பெற்றோர் ஆயிரம் கடவுள்களுக்குச் சமம். தங்களுடைய மகன், மகள் இருவரும் தசை நார் சிதைவு நோய்க்கு ஆளாகி நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் தவிப்பதைப் பார்த்து தினந்தோறும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த தங்கப்பாண்டியன்- மங்கையர்க்கரசி தம்பதியினர்.
தனியார் நிறுவன ஊழியரான தங்கப்பாண்டியன் வடமாநிலங்களுக்குச் சென்று கிடைத்த வேலையை செய்து சொற்ப வருமானத்தை குடும்பத்துக்காக அனுப்பிவைக்கிறார். வீட்டில் இருந்தபடியே சிறு, குறு தொழில் செய்து தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன், மகளை கவனித்து வருகிறார், மங்கையர்க்கரசி.
கை, கால்களைக் கட்டிப் போட்டது போல் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரத்தை அளிப்பது தசை நார் சிதைவு நோயாகும். பிறந்த சில ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதுபோல் தோன்றும் குழந்தைகளுக்கு, வளர, வளர இந்நோயும் அவர்களுடன் சேர்ந்தே வளரும். இவ்வாறான நோய்க்கு ஆளாகி 18 ஆண்டுகள் அதன்பிடியில் சிக்கி துயரத்தை தினமும் அனுபவித்து வருகின்றனர், பரத்(28), தீபா(26) என்ற அண்ணன் தங்கை.
தனது பத்தாவது வயதில், நோய்ப் பாதிப்புக்குள்ளானதை பரத் உணர்ந்துள்ளார். அதே நோய்க்கு ஆளான தீபா, பெற்றோரின் துணையோடு பத்தாம் வகுப்புவரை முடித்துள்ளார். அதன்பின்பு, மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியவில்லை.
படுத்த படுக்கையான தீபா, பரத் ஆகிய இருவருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதம் ரூ.1,500 வழங்கியதே தவிர, சிகிச்சைக்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்பது அவர்களது பெற்றோரின் வேதனையாக உள்ளது. அதுமட்டுமின்றி பேட்டரி வாகனத்தை வழங்கினால் அமர்ந்து செல்ல வாய்ப்பிருந்தும், ஒரே ஒரு வாகனத்தை வழங்கி இருவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூறியுள்ளது.
குடும்ப வறுமை ஒருபுறம், நோய்ப்பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகள் மறுபுறம் எனக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் தங்கப்பாண்டியன், "தங்களது குழந்தைக்கு ஏதாவது நோய் என்றாலே எந்தவொரு பெற்றோராலும் தாங்கிக்கொள்ளமுடியாது. ஆனால், எனது இரண்டு குழந்தைகளும் தசை நார் சிதைவு நோயின் பிடியில் இருக்கின்றனர். அவர்கள், வாழும் வரையில் சிரமமின்றி வாழ முயற்சித்து வருகிறேன்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் இதுவரை எந்தவொரு உதவியையும்; எனது குழந்தைகளுக்கு செய்யவில்லை. தசைநார்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கை கொடுத்து சிகிச்சைக்கு உதவ தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனது மகனுக்கும், மகளுக்கும் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. விடை தெரியாமல் நான்கு சுவற்றுக்குள் வாழ்ந்து வருகிறோம்" என வேதனையுடன் பேசுகிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தசை நார் சிதைவு நோய் கண்டறியும் மையம் உருவாக்கப்பட்டு, நோயாளிகளுக்கு உதவும் கருவிகளை அரசுகள் இலவசமாக வழங்கவேண்டும். அதிநவீன சிகிச்சைக்குத் தேவையான வாய்ப்புகளையும் உருவாக்கவேண்டும். உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அலட்சியம் காட்டாமல் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பபட்டவர்களுக்கு சிறப்பு நாற்காலிகள், உதவித் தொகை, விசேஷப்படுக்கைகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இதையும் படிங்க: தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைக் குணப்படுத்தி அரசு மருத்துவர்கள் சாதனை