நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்கள், கோழிப் பண்ணையாளர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பேசும்போது, "வணிகர்கள், இதர தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் வெளிமாநிலம் அல்லது வெளிமாவட்டத்திலிருந்து வரும்போது கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கரோனா பரிசோதனை செய்து 15 நாள்கள் தனிமைப்படுத்திய பிறகே பணி செய்ய வேண்டும்" என அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாமக்கல் மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லை பகுதிகளில் மேலும் 37 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
வெளிமாநிலம் அல்லது வெளிமாவட்டத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு பணிக்கு வருபவர்கள் இ-பாஸ் பெற்று கரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும். குறிப்பாக அவர்களின் தொழிற்சாலை நிர்வாகமும் பணிக்கு வந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ஹலோ சீனியர்ஸ், லேடீஸ் பஸ்ட் என்ற செயலிக்கு இதுவரை 50 புகார்கள் வந்துள்ளது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாக்டர்கள் இல்லை... முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் - மீளுமா விருதுநகர்?