நாமக்கல்: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்று, வாக்குகள் பிப். 22ஆம் தேதி எண்ணப்பட்டன. 21 மாநகராட்சிகளை முழுவதுமாக வென்ற திமுக கூட்டணி, பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. இதையடுத்து, மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளை திமுகவும், 5 வார்டுகளை அதிமுகவும் கைப்பற்றின. அதன்பின், நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வெற்றி பெற்றார்.
இதன் காரணமாக, பேரூராட்சித் தலைவர் கருணாநிதி வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 400 கிலோ கோழி இறைச்சி, 200 கிலோ ஆட்டு இறைச்சி ஆகியவை கொண்டு தடபுடலாக சமைத்து தனியார் திருமண மண்டபத்தில் கறி விருந்து வைத்தார். இந்த கறி விருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு