கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் நுழைவதைத் தடுக்கும்விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள 18 எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் காவலர்கள், சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையான வளையப்பட்டி அடுத்துள்ள எம்.மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் திருச்சி மாவட்ட எல்லையிலிருந்து வரும் வாகனங்களைக் காவல் துறையினர் தணிக்கைசெய்து கண்காணித்துவருகின்றனர்.
இன்று இந்தச் சோதனைச்சாவடியில் திருச்சியிலிருந்து வரும் வாகனங்களையோ அல்லது அதில் பயணிப்பவர்களையோ குறைந்தபட்சம் உடல் வெப்பநிலையைகூட பரிசோதனை செய்யாமல் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பணத்தைப் பெற்றுக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைய தொடர்ந்து அனுமதித்தனர்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் பணத்தைப் பெற்றுக்கொண்டு இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை மாவட்டத்திற்குள் அனுமதித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுவருவது, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.