நாமக்கல்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல்செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் காலை முதலே பலரும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல்செய்தனர்.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வாா்டுகளில் திமுக 33 வார்டுகளில் போட்டியிடுகிறது. இதர ஆறு வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 38 வார்டுகளில் போட்டியிடுகின்றது. பாஜக 24 வார்டுகளில் களமிறங்குகிறது.
இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட 25ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அரசியல் கட்சியினர் யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்யவில்லை. இருப்பினும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ தேவி என்பவர் மட்டுமே நேற்று (பிப்ரவரி 4) வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 5) வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாகத் தேர்தல் அலுவலர் அறிவித்ததால் அந்த வார்டிற்கு அவர் போட்டியின்றித் தேர்வானது உறுதியானது.
நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் 10-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்செய்துள்ள நிலையில் 25ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்போம் - ஓபிஎஸ்