தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, இதற்காக தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல்லில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
இவர் காந்தியின் கொள்கையை பின்பற்றி காந்தியின் உடை அணிந்தே வெளியில் பரப்புரை செய்துவருகிறார். இவர் தேர்தல் செலவிற்கு நாமக்கல் ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'தேர்தல் செலவினத்திற்காக தேர்தல் ஆணையம் 70 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் என்னிடம் தேர்தலுக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் ஆதார் அட்டையையும் கடவுச்சீட்டையும்வைத்துக்கொண்டு கடனாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைப் பெற்றுக்கொண்ட வங்கி மேலாளர் கடன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தாக ரமேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், என்னிடம் பணம் இல்லாததால் வங்கியில் கடன் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.