2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் வரவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 லட்சத்து, 69 ஆயிரத்து, 23 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து, 29 ஆயிரத்து, 720 பெண் வாக்காளர்களும், 140 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 14 லட்சத்து, 25 ஆயிரத்து, 883 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்களர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து, 697 என்ற அளவில் அதிகம் உள்ளது தெரியவந்தது. மேலும் 2021 ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் எனவும், வரும் நவம்பர் 21,22 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளிலும் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனவும் கேட்டு கொண்டார்.
இதையும் படிங்க: நாகை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு