நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் அடுத்துள்ள ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச் 11ஆம் தேதி பட்டதாரி பெண் ஒருவர் ஆடு மேய்க்கச்சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி, ஒரு சமூகத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இது இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கொட்டகை மற்றும் ஆலைக்கொட்டகையில் தங்கியிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு குடில்கள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
அதற்கு மாறாக, மற்றொரு சமூகத்தினர் சார்ந்த ஆலைக்கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநிலத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், கோவை மண்டல ஜஜி சுதாகரன் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, தற்போது இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜேடர்பாளையத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்..எஸ்.பி. விடுத்த வார்னிங்.. நாமக்கல்லில் நடப்பது என்ன?