நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் கால்நடை மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு கால்நடை மருத்துவராக பாலாஜி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சில தினங்களாகவே மருத்துவமனையில் பிரதமர் கிஷான் திட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனங்களுக்கான கடன் பெற மனுக்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, எலச்சிபாளையத்தைச் சேர்ந்த வசந்தா(35), ரகமத்(40) ஆகியோர் கால்நடை மருத்துவர் பாலாஜியிடம் மனு கொடுக்க சென்றதாகவும், அதனை வாங்க மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விவசாயிகளும், பொதுமக்களும் கால்நடை மருத்துவமனை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த எலச்சிபாளையம் காவல் துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தினார்.
இதன் பின்னர் கால்நடை மருத்துவர் பாலாஜி, பயனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். மேலும், மனு கொடுக்க வருபவர்களிடம் தவறாக பேசமாட்டேன் என்று கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.